சென்னை 8&3&06 தமிழ் முரசு
வந்துட்டாரய்யா வடிவேலு!
நடிகர் வடிவேலுவிடம் இருந்து ‘பிரஸ்மீட்’ என்று அவசர அழைப்பு பத்திரிகை அலுவலகங்களுக்கு பறந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவரது வீட்டின் முன் நிருபர்கள் நிரம்பி வழிந்தனர். எதற்காக திடீர்னு வரச் சொன்னார் என்று யாருக்குமே புரியவில்லை.
குறிப்பிட்ட நேரத்தில் வடிவேலு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டபடி மாடியில் இருந்து இறங்கி வந்தார்.
(வாசலில் நின்றிருந்த நான்கைந்து பேர் ‘அண்ணன் வடிவேலார்’ வாழ்க என்று கோஷம் போட பரபரப் பானது)
இனி அங்கிருந்து நேரடி ஒளிபரப்பு...
வடிவேலு: வணக்கம்.திடீர்னு உங்கள ஏன் வரச்சொன் னேன். எதுக்கு வரச்சொன்னேன்னு மண்டய போட்டு கொழப்பிக்காதீங்க. நானே சொல்லிடுறேன். புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன். எலக்ஷன்ல தனிச்சி போட்டிபோட்டு ஆட்சிய புடிக்கப் போறேன்.
நிருபர் குறுக்கிட்டு: இது உங்க அடுத்த படத்தோட கதையா சார்?
வடி: என்ன காமடி பண்றதா நெனப்பா... நான் எவ்வளவு சீரியசா சொல்லிட்டு இருக் கேன். கதையாம்ல கத. ஏன் நான் கட்சி ஆரம்பிக்கபடாதா? ஆட்சிய புடிக்கப் படாதா?
நிரு: ஏன் சார் திடீர்னு கட்சி ஆரம் பிக்கிறீங்க-? சினிமா வுல இருந்து ஓய்வு பெறப் போறீங்களா?
வடி: என்ன நக்கலா... மத்தவய்ங்க மாதிரி சினிமாவுல சான்ஸ் இல்லாம நான் கட்சி ஆரம்பிக்கலப்பு. இந்த நாட்டு அப்பாவி ஜனங்களுக்கு ஏதாவது செய்யணுங்கற வெறிதான். லட்சியம்தான்.
நிரு: உங்க கட்சிக்கு பேரு என்ன?
வடி: தே.ஆ.மு.தி.க.
நிரு: விளக்கமா சொல்லுங்க சார்...
வடி: அதாவது ‘தேசிய ஆண்கள் முன்னேற்ற திராவிட கழகம்’.
நிரு: கட்சியோட லட்சியம்--?
வடி: பேர பாத்தாலே புரியலயாக் கும். இந்த நாட்டுல தெனம் தெனம் பொம்பளங்க கையால அடி உத வாங்கி அவஸ்தப்படுற ஆண்களுக்கு தைரியத்த கொடுத்து அவங்கள காப்பாத்துறதுதான் தே.ஆ.மு.தி.க. லட்சியம்.
(வருங்கால முதல்வர்... ஆண்களின் விடிவிளக்கு அண்ணன் வடிவேலார் வாழ்க என்று வீட்டுக்கு வெளியே மீண்டும் கோஷம்)
வடி: பாத்தீங்கள்ல ஆண்கள் எப்படி எம்மேல உசிர வச்சிருக்காங்கனு!
நிரு: அதுசரி. பெண்கள் ஓட்டு உங்க கட்சிக்கு விழாதே--?
வடி: இப்படி வெவரம் இல்லாம பேசக்கூடாது. இப்ப ஆண்கள் எல்லாரும் பயந்து போயி பொம்பளங்க சொல்ற சின்னத்துல ஓட்டு போடுறாங்க. நான் ஆண்களுக்கு தைரியத்த ஊட்டுன பிறகு பாருப்பு. அத்தனை பொம்பளங்க ளையும் அடக்கி அவங் களயும் எனக்கே ஓட்டுப் போட வச்சிருவாங்க.
(நிருபர்கள் கூட்டத்தில் யாரோ சிரிப்பது காதில் விழ வடிவேலு முறைக்கிறார்)
என்னால சிரிச்ச வய்ங்க இப்ப எல்லா கட்சியிலயும் இருக்காங்க.
நான் கட்சி ஆரம் பிச்ச விசயம் தெரிஞ்சதும் என் பக்கம் வந்துருவாங்க.
நிரு: நீங்க கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருக்குதா?
வடி: எங்கட்சியோட எந்த கட்சியாவது கூட்டணி வச்சுக்க வாய்ப்பு இருக்கானு கேட்ருக்கணும். சரி பரவால்ல. அப்படி எந்த கட்சியா வது ஆசப்பட்டா ஒரே ஒரு கண்டிஷன்தான். நான்தான் முதலமச்சர். சம்மதம்னா ஓகே.
நிரு: அப்ப நாங்க கிளம்பட்டுமா?
(நிருபர்கள் எழுந்திரிக்க)
வடி: உட்காருங்க... உட்காருங்க... அப்படி என்ன அவசரம்? இன்னும் நாலு கேள்விய கேளுங்க. பெருசா பத்திரிகையில போடுங்க. அப்ப தான் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரும்.
(இப்படி மாட்டிக்கிட்டோமே என்று ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்)
நிரு: சரி. நீங்க தொடர்ந்து சினிமாவுல நடிப்பீங்களா?
வடி: அது எப்படிப்பு முடியும்? அதான் எலக்ஷன்ல ஜெயிச்சி நான் சிஎம் ஆயிருவேன்ல... சிஎம் ஆயிருவேன்ல... வேணும்னா ஒண்ணு பண்ணலாம். ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி சினிமாவுல நான் நடிக்கணுமானு கேட்கலாம். அவய்ங்க விருப்பப்பட்டா வருஷத்துக்கு ஒன்னோ ரெண்டோ நடிச்சிக் கொடுத்துட்டு போறேன்.
நிரு: அதே மாதிரி அரசியலுக்கு நீங்க வரணுமானு ஒரு கருத்துக் கணிப்பு இப்பவே நடத்தினா என்ன?
வடி: இந்த குண்டக்க மண்டக்க கேள்விதான வேண்டாங்கறது... இதுக்கெல்லாம் பயப்படுற வன் நான் இல்ல. ஆம்பள சிங்கம்டா.
(வடிவேலு கோபத்தின் உச்சிக் குப் போக, நடிகர் பார்த்திபன் வந்து கொண்டிருப்பதாக அவரது காதில் உதவியாளர் கிசுகிசுக்கிறார்)
வடி: யாரு? ஐயோ அவனா... இங்கயும் வந்துட்டானா... கேள்வி கேட்டே கொன்னுபுடுவானே சாமி... போதும் சாமி... போதும் நான் அரசியலுக்கே வரல...
(வீட்டுக்குள் ஓடி ஒளிகிறார்)
நிருபர்கள் அதை மட்டும் குறித்துக்கொண்டு நிம்மதியாக விட்டனர் ஜூட்!
முருகு