Thursday, July 5, 2012

சிரிப்போ சிரிப்பு


‘புலி’க்கு புத்துணர்வு முகாம்


மற்றவர்களை போல அப்படியே பேசி அசத்துவதில் கில்லாடி ‘மிமிக்ரி’ மகாதேவன். அவர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை!

‘‘மகாதேவா... இன்னைக்கு வைகோ மாதிரி பேசுடா!’’ என்று நண்பர்கள் உசுப்பேத்தி விட்டனர். அது போலவே ‘மிமிக்ரி’ மகாதேவன் பேசுகிறார். (கற்பனையாகத்தான்!) கேளுங்களேன்...
‘‘தமிழகத்தில் ஓர் அரசியல் புரட்சி நடந்து முடிந்திருக்கிறது. எது நடக்காது என்று நினைத்தீர்களோ அது நடந்து முடிந்து விட்டது. நான்காண்டு காலம் தமிழ்நாட்டில் நடந்த ஆட்சிக்கு எதிராக பேசி வந்த நான் திடீரென்று அணி மாறி செல்ல காரணம் என்ன என்று ஒவ்வொரு தமிழனும், இங்குள்ள தமிழன் மட்டுமல்ல... இலங்கைத் தமிழன், இங்கிலாந்து தமிழன் உலகத் தமிழர் எல்லாம் விடை தெரியாமல் தவிக்கின்றனர். அந்த ரகசியத்தை சொல்ல வேண்டுமா? முடியாது. கூட்டணி தர்மம் சொல்ல விடாமல் என் வாயை கட்டிப் போட்டு இருக்கிறது.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். பொடாவிலே கைது செய்து சிறையில் 19 மாதங்கள் அடைத்து வைத்த செல்வி ஜெயலலிதா வுடன் கூட்டா என்று கேட்கிறார்களே. அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அன்புச் சகோதரி அப்படி செய்ததில் என்ன தவறு கண்டீர்கள்? கைது செய்த போது எங்காவது ஒரு சிறு கல்லெறி சம்பவமா வது நடந்தது உண்டா? எங்களுக்குத் தெரியும் ‘கைது’ சரிதான் என்று!
அன்புச் சகோதரி ஆட்சியிலே யானைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தியதை பாராட்டினீர்களே. அவரது கருணை உள்ளத்தை வாழ்த்தினீர்களே. ஆனால் புலிகளுக்கு சிறப்பு முகாம் நடந்ததை கொடுமை என்கிறீர்களே... அதைத்தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. ஆம்... என்னையும் எனது அருமைச் சகோதரர்களையும் சிறையில் தள்ளி செக்கிழுக்கவா வைத்தார்கள்? இல்லையே... தினமும் காலையில் காற்றோட்டமாக உடற்பயிற்சி, நோய் அண்டாமல் இருக்க பத்தியச் சாப்பாடு, பொழுதை இனிதே கழிக்க வாலிபால் விளையாட்டு, ஃபேன் வேண்டாம்... இயற்கைக் காற்றை சுவாசியுங்கள் என்ற  சுற்றுச்சூழல் பாங்கு... அடடா! மீண்டும் அந்தக் பொடா  காலம்... இல்லை இல்லை... பொற்காலம் வராதா என்றல்லவா ஏங்குகிறேன். சிறைச்சோலை எனக்கு பிடிக்கவில்லை என்றால் ஜாமீன் கேட்டிருக்க மாட்டேனா? ஏன் கேட்கவில்லை? அதன் பிறகுமா புரியவில்லை உங்களுக்கு!
தாய் சொல்லை தட்டி விட்டேன் என்று புரளி ஒரு பக்கம். நம்பி விடாதீர்கள் அ.தி.மு.க. நண்பர்களே... நம்பி விடாதீர்கள். என் தாய் சொன்னது என்ன? நூறு ‘சீட்’ கொடுத்தாலும் என் மகன் ஜெயலலிதா பக்கம் போகமாட்டான். அது உண்மைதான். இந்த இடத்திலே ஒரு ஃப்ளாஷ் பேக். அன்புச் சகோதரி என்னை சிறைச் சோலையிலே வைத்திருந்த நேரம். அவரது அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சோதனை காலம். அப்போது போலீஸ் வேனிலே கிழிந்த ‘சீட்’டில்தான் எனது பயணம்.
விடுதலையானதும் என் தாயாரிடம் இதைச் சொன்னேன். அப்போது அவர் ‘என்னதான் நிதிநெருக்கடி என்றாலும் ஒரு புது ‘சீட்’ வாங்கி போட்டிருக்கக் கூடாதா?’ என்று கண்ணீர் விட்டார். இனி நூறு ‘சீட்’ தந்தாலும் ஜெயிலுக்கு போகாதே என்றார். எம்.எல்.ஏ. ‘சீட்’ தந்தால் போகாதே என்று அவர் சொல்லவே இல்லை.
ஏதென்ஸ் நகரத்திலே ஒரு கூண்டுக்குள் எலியும், பூனையும் ஒன்றாக இருந்தால் ‘அதிசயம்’ என்று பாராட்டும் பத்திரிகை நண்பர்களை கேட்கிறேன். எதிர் எதிர் துருவத்தில் இருந்த நாங்கள் கூட்டு வைத்தால் ‘சந்தர்ப்பவாதமா?’
கூட்டு வைத்தது தவறு என்பவர்களை கேட்கிறேன். 2001 பொதுத் தேர்தலிலே கண்ணை கட்டி காட்டில் விட்ட புலி போல் தனித்து நின்றேனே. அதற்கு தங்கத் தமிழகம் தந்த பரிசு என்ன? ‘டெபாசிட்’ பறிபோனதுதானே மிச்சம்!
இறுதியாக தமிழக மக்களுக்கு சொல்லிக்  கொள்கிறேன். இதை சந்தர்ப்பவாதக் கூட்டு என்று சொல்வதை நிறுத்துங்கள். அல்லது குமரி முதல் மெரீனா வரை மாபெரும் நடைப்பயணம் ஆரம்பித்து விடுவேன்...
(போதும்... போதும்... வயிறு புண்ணா போச்சு என்று நண்பர்கள் கடிவாளம் போட மிமிக்ரி மகாதேவன் பேச்சை முடித்தார்.)

சென்னை 12-3-06

No comments:

Post a Comment