Tuesday, October 22, 2013

 
நையாண்டி 1

“தலைவர் சிபிஐ விசாரணை கேட்டிருக்காராமே எதற்கு?”

“அந்த சினிமால வந்த காட்சி நஸ்ரியா தொப்புள்தானானு உண்மையை கண்டுபுடிக்கணுமாம்.”
 
(26 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)
 
 
நையாண்டி பார்ட் 2

“நீ என்னம்மா புகார் கொடுக்க வந்திருக்கே?”
“நான் கஷ்டப்பட்டு நடிச்ச தொப்புள் காட்சிய அநியாயமா நீக்கிஇருக்காங்க சார்…”
 
( 35 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)
 
 
நையாண்டி பார்ட் 3

“தொப்புள் காட்சிய படமாக்கும்போதே நீ ஏம்மா தடை சொல்லல?”
“சென்ஸார்ல வெட்டிடுவாங்கனு நினைச்சேன்.”
 
(36 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.) 
 


எங்கே எப்படி இருக்க வேண்டியவன்

(கணக்குல வீக்கானவங்க படிக்காதீங்க)

சின்ன வயசுல ஒரு மளிகை கடையில வேலை பார்த்தேன். கடை முதலாளி என்னை மொத்த யாவார கடைக்கு போயி ‘சிம்னி’ வாங்கிவரச் சொன்னார்.

ஒரு பெட்டியில் 40 சிம்னிகள் இருக்கும். திறக்காமல் அப்படியே வாங்கிக் கொண்டால், விலை 100. அதாவது ஒன்றின் விலை 2.50 ஆனால், இதில் எத்தனை சிம்னி உடைந்து போயிருக்கும் என்று தெரியாது. உடைந்த சிம்னி போக மீதமிருக்கும் சிம்னிகளுக்கு 100 ரூபாயை பிரித்து, சிம்னியின் விலையை நிர்ணயிக்க வேண்டும். நிறைய உடைந்து போயிருந்தால்… விலை எகிறிடும்… கொஞ்சம் ரிஸ்க்.

அதையே திறந்த பார்த்து உடையாத சிம்னியை மட்டும் வாங்கினால் ஒரு சிம்னியின் விலை 3.

ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்பதால் திறக்காத பெட்டியையே எடுத்து திறந்து பார்த்தபோது நல்லவேளையாக 3 சிம்னி மட்டுமே உடைந்திருந்தது. சேதாரம் போக மீதி உள்ள 37 க்கு கணக்கு போட்டால், ஒன்றின் விலை 2.70 காசுதான். அதாவது இருக்கின்ற இடத்திலேயே இருந்துகொண்டு ஒரு சிம்னிக்கு 30 காசு வீதம் மொத்தம் 11 ரூபாய் லாபம் பார்த்துக் கொடுத்தேன்.

வியாபாரத்துல குதிச்சி எங்கேயோ இருக்க வேண்டியவன்… ம்…


15 அக்டோபர்  


Friday, February 1, 2013

காதல் அழிவதில்லை.... சிறுகதை.... முருகு


காதல் அழிவதில்லை - சிறுகதை------ முருகு


மாலை நேரம். உருண்டு வந்த கடல் அலைகளில் கால்களை நனைத்தபடி சாந்தியும், சுதாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

''ஏய் சாந்தி! வழக்கமா லீவு நாள்ல நாம இங்க வர்றதை கவனிச்சிகிட்டு நம்ம பின்னாடியே சுத்தி சுத்தி வருகிறானே ஒருத்தன்...'' சுதா கேட்டாள்.

''அவன வச்சி நமக்கு தொந்தரவு எதுவுமே இல்லதான். ஆனாலும் அவன் என்னைத்தான்டி முறைச்சி பார்க்கிற மாதிரி இருக்கு. ஏதும் விபரீதம் ஆகுமோன்னு வேற பயமாயிருக்கு. அதனால இந்த பிரச்சனையை சின்னதா இருக்கும்போதே முடிச்சிடணும்னு நினைக்கிறேன்.''

''அதுசரிதான். என்ன பண்றது?''

''நான் ஒரு முடிவோடதான் இருக்கேன். இன்னைக்கு மட்டும் வரட்டும் பார்க்கலாம்'' என்று சாந்தி சொல்லி வாய் மூடவும், அவன் அவர்கள் கண்ணில் படவும் சரியாக இருந்தது.

''அதோ வர்றான்டி'' சுதா பரபரத்தாள். அவனும் இவர்களை கவனித்துக்கொண்டு அருகே வர ஆரம்பித்தான்.
உடனே சாந்தி, சுதாவின் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு கூட்டத்தில் நைசாக நழுவினாள்.

அருகே வந்தவன் சாந்தியை காணாமல் திகைத்தான். பிறகு சுதாவை கண்டவுடன், எப்படியும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் அங்கேயே நின்றான்.

சாந்தி வருவதற்குள் அவன் வேறு எங்கும் போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் சுதா, அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.

''ஹலோ... மிஸ்டர்! உங்க பேர் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''

''ஓ! தாராளமா தெரிஞ்சுக்கலாமே. என் பேரு ரவி. ஏன் கேட்கறீங்க?''

''இல்ல, எங்க பின்னாடியே சுத்திகிட்டு இருக்கீங்களே! எங்கள காதலிக்கிறீங்களோனு தெரிஞ்சுக்கத்தான்!'' சாதுர்யமாகப் பேசினாள்.

''ஒரு சின்ன திருத்தம். உங்கள இல்ல. உங்க பிரண்டு சாந்தியைத்தான் காதலிக்கிறேன்.''

''பரவாயில்லையே. பேரைக்கூட தெரிஞ்சுவச்சிருக்கீங்களே. ஆனா அவள்கிட்ட இந்த விசயத்தை நீங்க சொல்லலையா? சொன்னாத்தானே உங்ககூட காதல் வளரும்!'' கிண்டலாக சிரித்தாள் சுதா.

''நான் சொல்லவும் மாட்டேன். நீங்களும் உங்க பிரண்டுகிட்டே சொல்லிடாதீங்க. ப்ளீஸ்!'' கெஞ்சினான் ரவி.

''என்ன உளறல் இது? அவளை லவ் பண்றது அவளுக்கே தெரியக்கூடாதா?'' சற்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சுதா.

''உளறல் இல்ல, விவரமா கேளுங்க. முதல் முதலா இந்த கடற்கரையில் சாந்தியை பார்த்தபோதே, என் மனசை பறிகொடுத்துட்டேன். அப்புறம் ஒருநாள் நீங்க பேசிக்கிட்டு இருந்ததை கேட்டேன். அப்போதான்... தன் வருங்கால கணவர் எப்படியெல்லாம் இருக்கணும், தன்னை எப்படி மகாராணி மாதிரி வச்சிருக்கணும்னு சாந்தி கனவு கண்டுக்கிட்டு இருக்காங்கனு புரிஞ்சுக்கிட்டேன். அந்த கனவுகளை நிறைவேற்றும் தகுதியும், வசதியும் எனக்கில்லை. மேலும் எனக்குன்னு சில கடமைகள் இருக்கு. தவிர படிப்பை முடிச்சதும் வேலை தேடணும்.
இவ்வளவு பிரச்சனைகளை நான் வச்சிக்கிட்டு, சாந்தி மேல ஆசைப்பட்டது எவ்வளவு முட்டாள் தனம்னு எனக்கு புரிஞ்சது.  ஆனாலும் எப்பவுமே நான் ஒரு முடிவு எடுத்தா அத மாத்துறது இல்ல. அதனால இன்னொரு பொண்ண பார்க்கவும் மனசில்ல. எல்லா பொண்ணுகளுக்கும் இதுமாதிரி கனவுகளும் இருக்கும். அவங்க வாழ்க்கையில குறுக்கிட்டு, அவங்க ஆசைக்கு தடையா இருக்க வேண்டாம்னு ஒதுங்கிட நினைச்சேன்.
இருந்தாலும் என்னால சாந்தியை மறக்க முடியல. அடிக்கடி பார்க்கணும் போல தோணுது. அதனால நீங்க ஞாயிற்றுக்கிழமைதோறும் இங்க வருகிற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கறேன். என்னை தப்பா நினைக்காதீங்க. இந்த உண்மை சாந்திக்கு தெரிய வேண்டாம்'' மூச்சு விடாமல் ரவி பேசிமுடிக்க, சுதா வெகுவாக அதிர்ந்து நின்றாள். பிறகு ஆச்சரியத்துடன் அவனை ஏறிட்டாள்.

''இப்படியும் ஒரு காதலா?'' என்றவள், ''அய்யோ! இது தெரியாமல் சாந்தி போலீசை கூப்பிடப் போயிருக்காளே! இங்கிருந்து நீங்க போயிருங்க'' என்று பதறினாள்.

''பரவாயில்லை. என்னோட காதலுக்கு அப்படி ஒரு பரிசை சாந்தி கொடுத்தால் மகிழ்ச்சியா அதை ஏத்துக்கறேன்'' என அவன் சொல்லி முடிப்பதற்குள், சாந்தி இரண்டு போலீசாரோடு அங்கு வந்து சேர்ந்தாள்.

''இவன்தான் சார், நான் சொன்ன ஆள்'' என்று சாந்தி, ரவியைப் பார்த்து கை நீட்டினாள். உடனே போலீஸ்காரரின் கை ரவியின் கழுத்தில் இருந்தது.

''நடடா... ஒரு பொண்ணு தனியா பீச்சுக்கு வரமுடியாது. காதலிக்க வந்திடுவீங்களே!'' என திட்டிக்கொண்டே ரவியைத் தள்ளினார்.
அடுத்த வினாடி...

''சார்! அவரை ஒண்ணும் பண்ண வேண்டாம். அவர் என்னோட காதலர்!'' சுதா சத்தம்போட, சாந்தி புரியாமல் விழித்தாள். ரவியைக் காப்பாற்ற சுதாவுக்கு வேறு வழி தெரியவில்லை.

''என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? இந்தக் காலத்து பொண்ணுகளை நம்பவே முடியாது!'' என்று எரிச்சலோடு சொன்ன போலீஸ்காரர்கள், ரவியை விட்டுவிட்டு சென்றனர்.

''ஏன்டி... உன் காதலன்னு முதல்லயே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?'' சாந்தி வெடித்தாள்.

''சும்மா சொன்னேன்டி... நீ போன பிறகு கொஞ்ச நேரம் அந்த ஆள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன். அப்போதுதான்.... அவன் ஒரு மனநிலை சரியில்லாதவன்னு தெரிஞ்சது. அதான் அப்படி சொன்னேன். பாவம் போகட்டும்டி''

''இவ்வளவுதானா? நான் என்னவோன்னு நினைச்சேன். வா... போகலாம்''
சுதா, ரவியை பரிதாபமாகப் பார்த்தபடி சாந்தி பின்னால் சென்றாள். மனநிலை சரியில்லாதவன் என தான் பொய் சொன்னாலும் சாந்தியை பார்க்க இனி மேல் ரவிக்கு தடை இருக்காது என மனதில் நினைத்து ஆறுதல் அடைந்தாள்.

ஆண்டுகள் பறந்தோடின.

சாந்திக்கு வசதியான ஒரு இடத்தில் திருமணம் நடந்தேறியிருந்தது. தன் கணவனோடும், குழந்தையோடும் வாரந்தோறும் பீச்சுக்கு வர தவறுவதில்லை அவள்.

அப்போதும் அந்த மணல் வெளியில் அலைந்து கொண்டிருந்தான் ரவி.
பைத்தியம்தானே என்று அவனை அவள் கண்டுகொள்வதில்லை.

ஆனால் ரவி, தனது காதலி சாந்தியின் சந்தோசமான வாழ்க்கையை எட்டியிருந்து கவனித்து மன திருப்தி அடைந்தான்.

அவனைப் பொறுத்தவரை காதலில் தோல்வி அடையவில்லை. இதுவும் ஒருவித காதல்தான் என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்ட அவனது மகிழ்ச்சி மாறவேயில்லை!

கடல் அலைகளும் அப்படித்தான். கரையைத் தழுவ வந்து வந்து, மீண்டும் கடலுக்குள்ளேயே போய் விழுந்து கொண்டிருந்தது.