இன்ஸ்டுமென்டை
நொறுக்கியது பல்
விழுந்தது பில்
ஒரு சொத்தைப் பல் ரொம்ப நாளா தொந்தரவு தந்துச்சு. டாக்டர்கிட்ட போனேன். அவரு புடுங்கிரலாம்னார். மறுநாளு அவர் சொன்ன மாதிரி பல் ஆஸ்பத்திரிக்கு போனேன். சோதனைகள் முடிஞ்சதும் பல்லைப் பிடுங்க ஊசி போட்டாங்க.
கொஞ்ச நேரத்துக்குப் பின்னால பல்லைப் புடுங்க டாக்டர் ஒருத்தர் வேகமா வந்தார். இன்னும் நெறைய பேஷண்டுகள பார்க்கணும் போல. ஆனா அவர் எதிர்பார்த்ததுபோல அந்த பல்லை புடுங்குறது அவ்வளவு லேசான வேலை இல்லைனு புரிஞ்சுபோச்சு எனக்கு. பல இன்ஸ்டுமென்டுகளை மாற்றிப் பார்த்தார். ஊஹூம்... பல் அசைவேனாங்குது. விடாப்பிடியாக வர மறுக்குது.
உடனே இன்னொரு டாக்டர் களத்துல குதிச்சார். அவரும் பல முறை இழுத்தும், அசைச்சுப் பார்த்தும் ஊஹூம்.. பல் அசைஞ்சு கொடுக்கல. நான் பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்கேன். எனக்கு தைரியம் சொன்னபடியே முழு பலத்தோடு இழுக்க... 'பட்' என்ற சத்தம்.
'உடைந்துவிட்டதே...' டாக்டர் சொல்வது காதில் விழ, கண்ணை மூடிக் கொண்டிருந்த நான் லேசாக விழிச்சுப் பார்த்தேன்.
'இன்ஸ்டுமென்ட்தான் உடைந்துவிட்டது...' என்றார் டாக்டர்.
இனி இது சரிப்படாது என்ற முடிவுக்கு வந்த டாக்டர் சிறு சுத்தியால் பல்லை பதம் பார்த்தார். எதற்கும் அசைந்து கொடுக்காத பல் இப்போது ஆட்டம் கண்டது. அடி மேல் அடி அடித்தால் பல்லும் நகரும் என்ற நம்பிக்கையோடு தம் பிடிச்சு இழுக்க பல் கையோடு கழன்றே விட்டது.
அப்பாடா... என்று டாக்டரும், பேஷண்டும் (நானும்) நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பின்னர் சாப்பிட வேண்டிய மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அடுத்து 'உங்களால் உடைஞ்ச இந்த இன்ஸ்டுமென்டுக்கும் சேர்த்துதான் பில் போட்டிருக்கிறேன்' என்றார் டாக்டர்.
'பல்லில் வைத்த பஞ்சை கடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு வாயை திறக்கக் கூடாது'னு முதல்லயே டாக்டர் சொல்லிட்டதால வாயை திறக்க முடியாமல் பணத்தை கட்டிவிட்டு வெளியில் வந்தேன்.
No comments:
Post a Comment