பல் தெரிய சிரிக்கணும்
இப்போது பெரும்பாலும் எல்லா டிவிக்களிலும் மருத்துவப் பகுதி என்று நோயாளிகளின் கேள்விக்கு டாக்டர்கள் நேரடியாக பதில் சொல்லும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்படி ஒரு நிகழ்ச்சியை நான் நேரடியாக பார்த்ததன் எதிரொலி இந்த கற்பனை ஒளிபரப்பு.
வணக்கம் நேயர்களே... இன்று பல் சம்பந்தப்பட்ட 'பல்' வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல சிரிப்பூர்ல இருந்து வந்திருக்கிறார் நம்ம பால் டாக்டர் ஸாரி பல் டாக்டர் பல்லப்பன்...
''டாக்டர் ஆறு மாசம் ஒரு வருஷம்னு சிலர் பல் துலக்காம இருக்காங்க. அப்படிப் பட்டவங்களுக்கு ஏதாவது நோய் வருமா? திடீர்னு பல் துலக்க ஆரம்பிச்சா அதனால ஏதாவது சைடு எஃபக்ட் வருமா? கொஞ்சம் 'விளக்கி' சொல்லுங்க..''
''அது தப்பே இல்ல. ஆடு மாடு எல்லாம் பல் தேய்க்குதா? இல்லையே. நாம மட்டும் ஏன் தேய்க்கணும்? எறும்பு ஊர கல்லும் தேயும்னு சொல்வாங்க. பல்ல தேய்க்க தேய்க்க தேய்ஞ்சு கடைசியில இல்லாமலேயே போகுமே. அது பத்தியும் நாம யோசிக்க வேண்டாமா?''
''சூப்பரா சொன்னீங்க டாக்டர்.. (சே இது தெரியாம நான் பல தடவ பல்ல விளக்கிட்டேனே) சொத்தைப் பல்லுனு டாக்டர்கிட்ட போனா சொத்தையே பிடுங்கிடுறார்னு பேசிக்கறாங்க. அதுபத்தி...''
''குட் கொஸ்டின்... அது என்னன்னா...''
''கொஞ்சம் பொறுங்க டாக்டர்... எவனோ ஒரு காலர் நம்மள பேசவிடாம லைன்ல வந்து தொலைக்கறான். முதல்ல அவன வழியனுப்புங்க... வணக்கம்.. உங்க பேர சொல்லுங்க சார்...''
''என் பேரு பல்லீஸ்வரன்.. ஹி..ஹி...''
''சரி சிரிச்சது போதும். பல் விளக்கவே மாட்டீங்களா.. இங்க வரைக்கும் வாடை தூக்குது.. கேள்விய கேட்டு தொலைங்க...''
''மேடம்.. கூச்சமா இருக்குது...''
''பல் எத்தனை நாளா கூச்சமா இருக்குது?''
''அது இல்லீங்க... உங்ககிட்ட சொல்ல கூச்சமா இருக்குனு சொல்ல வந்தேன். விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் பல்லே தேய்க்கறது இல்ல. நீங்க மட்டும் சொல்லுங்க. ஒழுங்கா பல் தேய்க்கிறேன்.''
''லைன் கட்டாயிருச்சி. தொடர்ந்து நிகழ்ச்சிய பாருங்க... சரி டாக்டர் சொத்தை பிடுங்கறது பத்தி பேசிக்கிட்டு இருந்தோமே. அதுபத்தி சொல்லுங்க...''
''ஆமா. அது உண்மைதான். சொத்தை பல்லை பிடுங்கி நாங்க என்ன பண்ண முடியும்? அதுக்கா பல லட்சம் செலவழிச்சி டாக்டர் ஆகிறோம். ஆக்சுவலா முதல்ல நாங்க பல்லையே பாக்கறது இல்ல. எவ்ளோ சொத்து தேறும்னு பல்சதான் பார்ப்போம். லேசா பல் ஆடுதுனு வந்தா போதும். ரூட் கெனால், பைபாஸ், உரம் போடணும் அது இதுனு ஆளையே ஆட வச்சிருவோம்ல.''
(ப்ளீஸ் அந்த கேமராவ கொஞ்சம் என் பக்கமும் திருப்புங்க சார். டாக்டர் ஒரு கேள்விக்கு இருபது நிமிஷம் பதில் சொல்றார். இடையில நாலு கேள்விக்கு மட்டும் என் முகத்த காட்டவா இவ்ளோ மேக்கப் போட்டு வந்துருக்கேன். புரோகிராம பாருனு சொந்தபந்தத்துக்கு எல்லாம் எஸ்எம்எஸ் வேற அனுப்பியிருக்கேன். என் பல்லையும் கொஞ்சம் கேமிராவுல காட்டுங்கப்பா.)
''பழையபடி யாரோ ஒரு காலர். உங்க பேரு என்ன மேடம்?''
''பல்லழகி...''
''சொல்லுங்க பல்லழகி... என்ன பிரச்சனை உங்களுக்கு?''
''பல் எல்லாம் கொட்டிருச்சி... திரும்ப முளைக்குமா டாக்டர்?''
''வயசு என்னாச்சு?''
''எனக்கு இருபது டாக்டர். என் பல்லுக்கு பதினைஞ்சு...''
''அது எப்படி?''
''நான் பிறந்து அஞ்சு வருஷம் கழிச்சிதான பல் முளைச்சுதாம். ஆனா பல் கொட்டிப் போச்சுனு சொன்னது எங்க தாத்தாவுக்கு...''
''அவருக்கு தானா முளைக்காது. நாங்க செஞ்சு வச்சிருக்கோம். அதை செட்டா வாங்கி மாட்டிக்கலாம். சிங்கப்பல் செட், யானை பல் செட், முதலை பல் செட்டுனு பல வகை இருக்கு.. நீங்க உங்க ஊருக்கு பக்கத்தில உள்ள டாக்டர போய் பாருங்க. அவரு மத்தத சொல்வார்...''
''அங்க போனா காச புடுங்குவார்னுதான உன்கிட்ட கேள்வி கேட்கறேன் டுபுக்கு...''
''லைன் கட்டாயிருச்சி டாக்டர்...''
''நீங்கதான கட் பண்ணி காப்பாத்தினீங்க. தாங்ஸ்... நல்லதா போச்சி... இந்த ஜனங்களே இப்படித்தான். அடிக்கடி டாக்டர்கிட்ட பல்லக்காட்டினா எந்த பிரச்சனையுமே வராது...''
''ஜனங்களுக்குத்தான டாக்டர்...''
''இல்ல... டாக்டர்களுக்கு...''
''கேமரா ஓடுது கண்டத உளறாதீங்க.. நிகழ்ச்சி முடியப்போற நேரத்துல ஒரு காலர் வந்திருக்கார்.. என்ன சார் பிரச்சனை உங்களுக்கு?''
''டாக்டர் எனக்கு ஒரே பல்வலி...''
''நீங்க டாக்டர்கிட்ட காண்பிங்க...''
''இல்ல டாக்டர்.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணுகிட்ட பல்ல காட்டினேன். ஓங்கி அறைஞ்சிட்டா.. அதுல இருந்து யார்கிட்டயும் பல்லக் காட்டக்கூடாதுனு சபதம் போட்டிருக்கேன் டாக்டர். எங்க ஊர்ல ஒரே ஒரு லேடி டாக்டர்தான் இருக்காங்க டாக்டர் ப்ளீஸ்... இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க...''
''இன்னொரு காலன்... என்ன பிரச்சனை சார்...''
''மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. சினேகா மாதிரி இருக்கீங்க... சோ சுவீட்... என்ன பேஸ்ட் யூஸ் பண்றீங்கனு தெரிஞ்சுக்கலாமா?''
''டேய் மரியாதையா போன நீயே கட் பண்ணிடு. இல்ல.. இங்கேயிருந்து ஒரு குத்து விட்டேன்னா பல் எல்லாம் எகிறிடும்... அவன் கிடக்கிறான் விடுங்க டாக்டர். புரோகிராம் முடியிற நேரம் வந்தாச்சு. நேயர்களே அடுத்த வாரம் சந்திப்போம். நன்றி வணக்கம்.''
-முருகு.-