பறவை காதல்
எங்கள் கிராமத்தையொட்டி அமைந்துள்ளது, தேரிமணல்
குன்றுகள். பாலைவனம் போல் இருந்தாலும் அவற்றிற்கு ஏற்ற தாவர வகைகளும் நிறைய
இருக்கும். என் சின்ன வயதில் அங்கு பறவைகளும் நிறைய இருந்தன. சின்ன
வயதிலேயே பறவைகள் மீது இருந்த ஆர்வத்தால் அவற்றை ரசிக்க செல்வேன்.
ஒருமுறை
ஒரு புளியமரத்தின் பக்கம் சென்ற போது ‘கீச் கீச்‘ குரல் காதில் தேனாக
பாய்ந்தது. அந்த கூட்டினை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்
கொண்டது. உடனே மறைந்திருந்து கவனித்தேன். தாய் பறவை உணவை ஊட்டும்போது
மட்டும்தான் குஞ்சுகள் கத்தும். அது வெளியே பறந்தவுடன் அமைதியாகிவிடும்.
சிறு பொந்தில் இருந்து தாய் பறவை மின்னல் வேகத்தில் வெளியேறிவிடும்.
அப்புறம் அதன் கூட்டினை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கே நேரம் எடுத்துக்
கொள்ள வேண்டும். முதலில் அந்தப் பறவை எந்த மரத்தில் இருந்து பறந்து
செல்கிறது என்று கவனிக்க வேண்டும். அடுத்து எந்த கிளை... இப்படி நெருங்கி
மறைந்திருந்து பார்த்து அடுத்த முறை உணவோடு வரும் தாய் பறவை எந்த பொந்தில்
நுழைகிறது என்று கண்டுபிடித்தேன்.
அப்புறம் என்ன? மரத்தில் மளமளவென
ஏறிவிட்டேன். அந்த பொந்து இருந்ததோ உயரமான கிளையின் நுனி பகுதி.
பார்த்துவிட வேண்டும் என்று துடிப்பில் நெருங்கி சென்று விட்டேன். எட்டிப்
பார்த்தால் அந்த பொந்து நீண்டு கொண்டே சென்றது. யாரோ எதிரி என்பதை உணர்ந்த
குருவி குஞ்சுகள் அடியில் சென்று பதுங்கிக் கொண்டன. எப்படி பார்ப்பது என்று
யோசித்தேன். புளிய மர இலைகளை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து உதிர்த்து அந்த
பள்ளத்தை நிரப்பினேன். குருவி குஞ்சுகள் மெல்ல மெல்ல மேலே வந்தன. சிறிது
நேரம் ரசித்துவிட்டு இறங்கிச் சென்றேன்.